Rock Fort Times
Online News

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஜிஎஸ்டி 2.0…!* 2027ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக உயர வழிவகுக்கும்!

சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, புது தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து தனது பதினோராவது தொடர்ச்சியான சுதந்திர தின உரையில், நாட்டின் மக்களுக்கு ‘தீபாவளி’ பரிசாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை அறிவித்தார். மத்திய அரசின் முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களில், 28% மற்றும் 12% வரி அடுக்குகளை நீக்குவது உள்ளிட்ட பல முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இது வரவிருக்கும் பண்டிகை காலத்திலும், அதற்குப் பிறகும் நுகர்வை அதிகரிக்க தேவையான ஊக்கத்தை வழங்கும். 28% மற்றும் 12% வரி அடுக்குகளில் இருந்த பொருட்கள் முறையே 18% மற்றும் 5% வரி அடுக்குகளுக்கு மாற்றப்படவுள்ளன. குறிப்பாக, 12% இலிருந்து 5% அடுக்குக்கு மாற்றப்படவுள்ள பொருட்கள் ‘ஆம் ஆத்மி’ (சாமானிய மனிதர்) க்கு பெரிதும் பயனளிக்கும். ஏனெனில், இவற்றில் பெரும்பாலும் வெண்ணெய், நெய் மற்றும் பிற கொழுப்புகள், பழக்கூழ் அல்லது பழச்சாறு, பானங்கள், சுகாதார நாப்கின்கள், சோப்புகள், ஷாம்புகள், கழிப்பறைத் தேவைகள் போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 28% இலிருந்து 18% அடுக்குக்கு மாற்றப்படவுள்ள பொருட்கள், பயணிகள் வாகனங்கள், ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற நீடித்த நுகர்வோர் பொருட்களை வாங்க விரும்பும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த முன்மொழியப்பட்ட வரி விகித மாற்றங்கள் நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) அடிப்படையில் பணவீக்கத்தை 50-60 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக உணவு மற்றும் பானங்கள் பிரிவில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஐ டி எஃப் சி ஃபர்ஸ்ட் பேங்க் கணிப்பின்படி, இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஆண்டு முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 60 அடிப்படை புள்ளிகள் உயர்த்தக்கூடும். மேலும், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சிகரெட், புகையிலை, ஆன்லைன் கேமிங் சேவைகள் போன்ற சில ஆடம்பர மற்றும் போதைப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 40% ‘பாவ விகிதம்’ அறிமுகப்படுத்த மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன்மூலம், அந்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகப்படியான பயன்பாடு குறைக்கப்பட்டு, நாட்டின் மனித வளங்களில் ஏற்படும் பாதகமான விளைவுகள் தடுக்கப்படும். அத்துடன், நிலையான ஜிஎஸ்டி விகிதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து வகையான ‘செஸ்’ வரிகளையும் ரத்து செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, முதன்மையாக தனியார் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. நாட்டு மக்களின் அதிகரித்து வரும் நுகர்வு நடத்தைக்கு ஏற்ப, இந்த சீர்திருத்தங்கள் சரியான நேரத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இதை, புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் நடத்திய வீட்டு நுகர்வுச் செலவு கணக்கெடுப்பு-5 (HCES-5) தெளிவுபடுத்துகிறது. 2017 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறை, மத்திய பட்ஜெட்டிற்கு கிட்டத்தட்ட 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் நிகர வருவாயை பங்களித்துள்ளது. இந்த மறுசீரமைப்பு, வரி அடிப்படையை கணிசமாக விரிவுபடுத்துவதோடு, உலகளாவிய சவால்களை மத்தியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றும். மேலும், 2027ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக உயர வழிவகுக்கும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்