திருச்சியில் பஸ் நிறுத்தத்தில் நிற்காத அரசு நகர பேருந்து: பின்னாடியே ஓடிய கல்லூரி மாணவிகள்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே கொட்டப்பட்டு பஸ் நிறுத்தம் உள்ளது. ஏர்போர்ட், மாத்தூர், போலீஸ் காலனி, கீரனூர் போன்ற வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் இங்கு நின்று செல்வது வழக்கம். இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சற்று தூரத்தில் பெரியார் ஈ.வெ.ரா கலைக்கல்லூரி இருப்பதால் இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு இங்கிருந்து செல்வது வழக்கம். அந்தவகையில் இன்று (அக்.10) கல்லூரி வகுப்புகள் முடிந்து வழக்கம் போல கொட்டப்பட்டு பஸ் நிறுத்தத்தில் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து கீரனூர் செல்லும் TN 55 N 1129 என்கிற பதிவு எண் கொண்ட நகரப் பேருந்து அவ்வழியாக வந்தது. கொளுத்தும் வெயிலில் பேருந்துக்காக காத்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேருந்தை நிறுத்துமாறு கை காட்டினர். ஆனால் அதன் டிரைவர் பேருந்தை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் 100 மீட்டர் தள்ளி நிறுத்தியுள்ளார். இதனால் பேருந்தில் ஏற மாணவ – மாணவிகள் ஓடினர். ஆனால் பேருந்தில் அவர்கள் ஏறுவதற்கு முன்பாகவே டிரைவர் பஸ்ஸை எடுத்து விட்டார். இதனால் பல மாணவர்கள் ஓடும் பேருந்தில் தாவி ஏறுகிற சூழல் உருவானது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.