Rock Fort Times
Online News

கேஸ் தட்டுப்பாடு: மத்திய அரசை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் நாளை(மார்ச் 15) திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்…!

மத்திய அரசின் தவறான கொள்கையினால் நாடு முழுவதும் கேஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்து நாளை( மார்ச் 15) தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் இன்று(14-03-2026) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், மத்திய அரசின் தவறான கொள்கையினால் தமிழகத்தில் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் இல்லாததால் பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், உணவகங்கள் மற்றும் இல்லங்களுக்கு சீரான கேஸ் சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தலைமை கழக ஆணைக்கிணங்க மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நாளை (மார்ச் 15) காலை 10 மணி அளவில் திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழகங்களில் கழக நிர்வாகிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார் .   இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம் எல் ஏ, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்