கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும்… * திருச்சி வந்த பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!
2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். தூத்துக்குடியில் விழா முடிந்த பிறகு, விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு( ஜூலை 26) 10.15 மணிக்கு பிரதமா் மோடி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து அவரை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது கோரிக்கை மனு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி , பிரதமர் மோடியிடம் அளித்தார். அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாக தெரிவித்தார்.பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மாரியாட் ஓட்டலில் தங்கினார். இன்று (ஜூலை 27) அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் விழாவிற்கு புறப்பட்டு செல்கிறார்.
Comments are closed.