Rock Fort Times
Online News

திருச்சி, உறையூர் எஸ்.எம்.மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு… * மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்!

திருச்சி, உறையூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1994- 96ம் கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவ- மாணவிகள்30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் “சங்கமம் 96” நிகழ்ச்சி திருச்சியில் இன்று(ஆகஸ்ட் 17) நடைபெற்றது. இவர்கள் உயர்கல்வி முடித்து தற்போது சென்னை, திருச்சி, சேலம், கரூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பேராசிரியர்கள் ஆகவும், வழக்கறிஞர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க முன்னாள் மாணவர் பொன்.கணேஷ் மூர்த்தி முயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர், வாட்ஸ் அப் குழு ஒன்றை அமைத்து ஒவ்வொருவராக இணைத்தார். அந்த வகையில் முன்னாள் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்தனர். அதேபோல அவர்களுக்கு கல்வி அறிவு புகட்டிய முன்னாள் ஆசிரியர்களும் கண்டறியப்பட்டனர்.பின்னர் பத்திரிகை அச்சடித்து அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.அவர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் “சங்கமம் 96″நிகழ்ச்சி திருச்சி வயலூர் சாலை எம்.எம். நகரில் உள்ள வி.எல்.வித்யா ஹாலில் இன்று காலை நடைபெற்றது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் இன் முகத்துடன் வரவேற்றுக் கொண்டனர்.அதனைத்தொடர்ந்து இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் இளங்கோ, கிருஷ்ணமூர்த்தி, அனந்த பத்மநாபன், அன்புமணி, சம்பத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

தனது ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 50- க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர், அவர்கள் அனைவரும் கனத்த இதயத்துடன் பிரியா விடை பெற்று சென்றனர். இந்த சங்கமம் நிகழ்ச்சி இனி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்று விழா குழுவினர் தெரிவித்தனர்.

 

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்