கோவை, சிங்காநல்லூர் தொகுதியில் 2 முறை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சின்னசாமி. ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். கடந்த 2006ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது ஐஎன்டியுசி-யில் பிளவு ஏற்பட்ட நிலையில் சின்னசாமி தலைமையிலான அணியினர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர். அப்போது இரட்டை இலை சின்னத்தில் நின்று சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று சின்னசாமி எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அதன் பின்னர் அதிமுகவில் அவர் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தார். அதன்பின்னர், டிடிவி தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்து அங்கும் தொழிற்சங்க பேரவை செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தவர் சில மாதங்களில் மீண்டும் அதிமுகவில் இணைந்து, அக்கட்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (டிச.3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.