தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, மறுபக்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி நிர்வாகிகள் ஒருங்கினைப்பு, பொதுக்கூட்டம் என தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்சிகளை பலப்படுத்தும் வகையில் மாற்றுக் கட்சியினரை தங்களது கட்சியில் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் நாளை ( ஜனவரி 21 ) மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்துவரும் நிலையில் அங்கிருந்து விலகி அவர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் நம்பிக்கைக்குரிய ஒருவராகவும், ஜெயலலிதா அமைத்த நால்வர் அணியில் ஒருவராகவும் இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.கடந்த மாதம் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் திமுகவில் இணைய இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா பகுதிகளை வலுபடுத்தும் நோக்கத்தை மனதில் வைத்தே வைத்திலிங்கத்தை திமுகவில் சேர்க்க உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Comments are closed.