தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய சி.வி.சண்முகம், தமிழக அரசின் உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சித்தார். அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். முதலமைச்சர் அதைவிட ஒரு படி மேலே போய் உங்க கனவ சொல்லுங்க என்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும், கனவை நிறைவேற்றுவீர்களா என கேள்வி எழுப்பினார். சி.வி.சண்முகத்தின் இந்த சர்ச்சை பேச்சு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
வருத்தம் தெரிவித்தார்,
அவரது இந்த பேச்சு சர்ச்சையானதால் சி.வி. சண்முகம் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். “நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது மட்டுமே; எந்தவிதமான நோக்கத்துடனும் அது கூறப்படவில்லை” என அவர் தெரிவித்தார். மேலும், தனது பேச்சால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இதேபோல, சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக ஆர்ப்பாட்டத்தில் ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.