சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உதான் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இதன்மூலம், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் பயன் பெற்று வந்தனர். ஆனால், கொரோனா காரணமாக ஊரடங்கு மற்றும் 3 ஆண்டு ஒப்பந்த காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பல்வேறு தரப்பினர் சிரமமடைந்தனர். இதனையடுத்து, சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இதனையடுத்து, உதான்-5 திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு மீண்டும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இச்சேவையை வழங்க, அலையன்ஸ் ஏர் மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர்-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. தொடர்ந்து, கொச்சின்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் மறுமார்க்கமாக இயக்கப்படும். இதேபோல், அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் பெங்களூர்-சேலம்- ஐதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. தொடர்ந்து, ஐதராபாத்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என தெரிகிறது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் இருந்து மீண்டும் பயணிகள் விமான சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.