Rock Fort Times
Online News

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் பலி- 4 பேர் படுகாயம்…!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 1) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படு காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி – சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன்பட்டியில் கமல்குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ( பெசோ) உரிமம் பெற்று கோகுலேஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 50- க்கும் மேற்பட்ட அறைகளில் 80- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது மருந்து கலவை செய்யும் அறையில் காலை 8.30 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அதில் மீனாம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் மகாலிங்கம் (55) என்பவரது உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ராமராஜ் மகன் ராமமூர்த்தி (45), செவல்பட்டியை சேர்ந்த கூடலிங்கம் மகன் லிங்குசாமி (45) உட்பட 4 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்