Rock Fort Times
Online News

பீகாரில் 121 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…* நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களிப்பு…!

பீகார் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் இன்று (நவ. 6) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில வாரங்களாக தேர்தல் ஆணையம் செய்து வந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சில வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் காலை 6.30 மணிக்கே வந்து வரிசையில் காத்திருந்தனர். முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 45,341 வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு ஆர்வமுடன் வருவதால், வாக்குப்பதிவு சதவீதம் 70%-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி பல ஆண்டுகளாக பீகாரில் கோலோச்சி வரும் நிலையில், மீண்டும் எப்படியேனும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என இரண்டு கட்சிகளும் கடந்த சில வாரங்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. பிரதமர் மோடியும் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மறுபுறம் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 2- ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் நவம்பர் 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்