Rock Fort Times
Online News

அரசியல் கட்சிகளின் கூட்டங்களின் போது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் அபராதம் …* அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு!

கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டங்களை நெறிப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில் இன்று(06-11-2025) நடைபெற்றது. மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் மற்றும் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. என்.ஆர்.இளங்கோவன், அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, வி.சி.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், தேமுதிக சார்பில் சந்திரன், நல்லதம்பி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வீரபாண்டியன், மாரிமுத்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் மௌரியா, செந்தில், மதிமுக சதன் திருமலைகுமார், பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை கூட்டத்தில் எடுத்துக் கூறினர்.

இதில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் “அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் நானும் என்.ஆர். இளங்கோவன் பங்கேற்று பேசினோம். அம்பேத்கர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் பேச்சு, எழுத்து உரிமை வேண்டும் என கூறினார். ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக கூடும் உரிமை அனைவருக்குமே உள்ளது. நீதிமன்ற பரிந்துரைகள் ஏற்ற வகையில் இருக்க வேண்டும். ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த கண்டிஷன் போட்டாலும், அடிப்படை உரிமைகளை மீறாமல் இருக்க வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பின்னர் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும். ஏதேனும் மாற்றம் இருந்தால் திருத்தப்படும்” என்று அவர் கூறினார். இதனிடையே ரோடு ஷோ நடத்தக்கூடாது என்று சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும், பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும், மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டத்தில் போலீசாரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்