Rock Fort Times
Online News

மாநாட்டுக்கு சென்ற போது உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி: மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி…!

மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசியலில் அரசியலியக்கத்தினர் இரண்டு வகை. மக்கள் பிரச்சனைகளை பல ரூபத்தில் சம்மந்தப்பட்டவர்கள் பார்வைக்கு கொண்டு சென்றாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல கம்முனுயிருப்பது முதல் வகை. அதே வேளையில் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனே செவிசாய்ப்பது இரண்டாவது வகை. இப்படியான அரசியலில் தான் இரண்டாவது வகை என மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். ஏற்கனவே தனது அரசியல் இயக்கத்தின் பெயரில் எழுத்து பிழையிருப்பதை சுட்டிக் காட்டியவுடன் சரிசெய்த விஜய், தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டிற்கு செல்லும் வழியில் உயிர் நீத்த திருச்சியை சேர்ந்த நிர்வாகிகள் இரண்டு பேர் உள்ளிட்டவர்களுக்கு நிதி வழங்க மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தோம். மேலும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இடம் கொடுத்தவர்களுக்காக விஜய் விருந்து கொடுத்து உபசரித்த பொழுதும், மாநாட்டிற்காக இடம் கொடுத்தவர்களுக்கு விருந்து. ஆனால் விஜய்க்காக ரசிகர் மன்ற காலம் தொட்டு உழைத்தவர்களுக்கு இதயத்தில் மட்டும் இடமா….?  என சற்று காட்டமாகவே அறிக்கை வாயிலாக விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.  இதனை தொடர்ந்து த.வெ.க.மாநாட்டிற்கு சென்ற பொழுது உயிர்நீத்த 6 தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்ச ரூபாய் நிதியும், மறைந்த நபர்களின் குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதாக விஜய் அறிவித்துள்ளது உள்ளபடியே வரவேற்கதக்கது. எனவே பாரம்பட்சம், அரசியல் காரணமின்றி சக தோழர்களை இழந்ததாக உணர்ந்து மக்கள் நீதி மய்ய திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தோம். அதனை ஏற்று நிதியுதவி வழங்கிய புதிய அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவருக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்