Rock Fort Times
Online News

வங்கி பெண் அதிகாரி கத்தியால் குத்திக் கொலை – கள்ளக்காதலன் தற்கொலை..!

திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் 3-30 மணிக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கிளியனூர் புறவழிச் சாலையில்
கூல்கூத்தப்பாக்கம் அருகே வந்தபோது திடீரென காரை ஓட்டி வந்தவர் சாலையோரமாக காரை நிறுத்தினார். பின் சாலையின் தடுப்பு கட்டையில் சில நிமிடம் அமர்ந்திருந்தவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் டிஐஜி ஜியாஉல்ஹக், எஸ்.பி.சசாங்சாய்,டி.எஸ்.பி.சுனில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது பெண் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கோபிநாத் (வயது 37) என்பதும், புதிதாக துவங்கப்பட்டுள்ள மரக்காணம் தனியார் வங்கியின் கிளை மேலாளர் என்பதும், திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. காரில் பிணமாக கிடந்தது, கடலூர் மாவட்டம் நெய்வேலி வடகுத்து இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மதுரா (32) என்பதும், திருமணமான இவருக்கு பாண்டிஸ் என்கிற கணவரும், ஒரு குழந்தை இருப்பதும், புதுச்சேரி லாஸ்பேட்டையில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், இவர் ரெட்டியார் பாளையத்தில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்ததும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் உள்ள வங்கியில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்த போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது. இந்த நிலையில், கள்ளக்காதலியுடன் நேற்று காரில் வந்த போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதும், இதில் ஆத்திரமடைந்த கோபிநாத், மதுராவை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்