Rock Fort Times
Online News

ஹான்ஸ் விற்பதாக கூறி வியாபாரிக்கு ரூ.20 ஆயிரம் ‘பைன்’: போலி அதிகாரியை நைய புடைத்த கிராம மக்கள்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள மூவராயன் பாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்குச் சென்ற மூன்று பேரில் ஒருவர் ஹான்ஸ் பாக்கெட் கேட்டுள்ளார். அதற்கு ஆனந்த் இங்கு ஹான்ஸ் விற்பதில்லை என கூறியுள்ளார். பின்னர், அவரிடம் நீண்ட நேரம் பேசி ஒரு ஹான்ஸ் பாக்கெட்டை வாங்கினார் . அப்போது அங்கு மறைந்திருந்த அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் விரைந்து வந்து ஆனந்திடம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்கிறாயா?, நாங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உங்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என கூறியுள்ளனர். இதனால் பயந்து போன வியாபாரி ஆனந்த், இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என அவர்களிடம் கூறியுள்ளார். சரி, இது முதல் முறை என்பதால் உங்களை விட்டு விடுகிறோம் ஆனால் அபராதமாக ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என வியாபாரியை மிரட்டி உள்ளனர். வேறு வழியின்றி ஆனந்த், அவர்கள் கேட்ட தொகையை கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் கடைக்கு வந்த ஒரு நபர் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து வீடியோ எடுத்து அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி இவர்கள் உண்மையான உணவு பாதுகாப்பு அதிகாரிகளா? என விசாரிக்க கேட்டுள்ளார். அவர்கள் விசாரித்ததில் அப்படி யாரும் உணவு பாதுகாப்புத் துறையில் வேலை பார்க்கவில்லை என்பது தெரிய வந்தது. இதை கடை வியாபாரியிடம் அந்த நபர் தெரிவித்தார். இதையடுத்து குருவம்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடையில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் நிற்பதாக ஆனந்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள், கிராம மக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து மண்ணச்சநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், முசிறி அருகே உள்ள கீழ கண்ணுகுளம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்(32) என்பதும், நாங்கள் மூன்று பேரும் இது போன்ற பல இடங்களில் சோதனை என்ற பெயரில் வியாபாரிகளிடம் பணம் பறித்ததாக கூறினார். பின்னர், வியாபாரி ஆனந்த் அளித்த புகாரின் அடிப்படையில் வெங்கடாசலத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவரது கூட்டாளி இரண்டு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்