Rock Fort Times
Online News

விபத்து இழப்பீடு வழக்கில் போலி ஆவணம் : 22 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞர் கைது!

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் வக்கீல் சுப்ரமணியன் என்ற ஏ.கே.சுப்பு. இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு விபத்து நடந்ததாக போலி ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரினார். இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாகவும், இதுபோல பல சம்பவங்கள் நடந்ததாகவும் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றவும் கூறியிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு சுப்பிரமணியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி வக்கீல் சுப்பிரமணி திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தண்டனையை உறுதி செய்தார். இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் 2014-ம் ஆண்டு தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இறுதியாக வக்கீல் சுப்பிரமணியன் சுப்ரீம்கோர்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகு ஜாமீன் பெற்று மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28-ந்தேதி வக்கீல் சுப்பிரமணியன் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாந்தி, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடரப்பட்டு 22 ஆண்டுகளுக்கு பிறகு வக்கீல் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்