அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்க அண்ணா பல்கலைக்கழம் முடிவு செய்துள்ளது. சென்னை சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்கலைகழகமே இல்லாத ஒரு அமைப்பு, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் என்று மெகா மோசடியை அரங்கேற்றி உள்ளது. இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், கஜராஜ், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ் இப்படி சில பிரபலங்களை முன்னிறுத்தி 50க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை ஓய்வு பெற்ற நீதிபதி வழங்கி உள்ளார். சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் விருது நிகழ்ச்சி என்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைகழகம் என்பதை பெரிதாக அச்சிட்டிருந்தனர். அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் மட்டுமே அச்சிடக்கூடிய அரசு முத்திரையும், சட்ட விரோதமாக அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அண்ணா பல்கலைகழகமே தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் நம்பி விட்டனர். இந்த போலி டாக்டர் பட்டம் குறித்த தகவல் அறிந்ததும் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கூறுகையில், முதலில் தான் விருந்தினராக மட்டுமே பங்கேற்றதாக தெரிவித்தார். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலை கழக அரங்கில், அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி போலியாக டாக்டர் பட்டம் வழங்கிய குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் நபர்களை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இது தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர். மேலும் கவர்னர, செயலாளர், உயர்கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.