Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள டாஸ்மாக் பாரில் கோஷ்டி மோதல்:- மது பாட்டிலால் தாக்கி ஒருவர் படுகொலை…!

திருச்சி, கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட தேவதானம் பகுதியில் டாஸ்மாக் கடையோடு இணைந்த பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் இன்று (23-04-2025)  இரவு சஞ்சீவி நகரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகன் கற்குவேல் (வயது 44)தனது நண்பரான மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் மது அருந்த சென்றார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சுப்பிரமணி, ராஜு மற்றும் கண்ணாயிரம் ஆகிய மூவரும் மதுபோதையில் உரக்க பேசிக் கொண்டிருந்தனர். இதை சரவணன் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், டாஸ்மாக் பாரில் இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், கைகலப்பாக மாறியது. அப்போது சுப்பிரமணி, தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் கற்குவேலின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கற்குவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கற்குவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கண்ணாயிரத்தை கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற பார் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக எந்நேரமும் இங்கு மது விற்பனை கன ஜோராக நடைபெறுகிறது. இதனால் இங்கு அடிக்கடி தகராறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த மதுபான கடை மற்றும் பாரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்