நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த மேலக்குறிச்சி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 35 வயதாகும் அசோக்குமார் 1 வயதாக இருக்கும் போதே மூளை காய்ச்சலால் இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளாா். இதனால் 35 ஆண்டுகளாக பார்வை இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அசோக்குமாரின் தாயார் அஞ்சலையம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி அசோக்குமார் தன்னைப் போல் பார்வை இல்லாதவர்களுக்காக தன் தாயாரின் கண்களை தானம் செய்ய முன்வந்துள்ளாா். இதனையடுத்து லயன்ஸ் கிளப் ஆப் நாகை போர்ட் டவுன் தலைவர் சண்முகம் மூலமாக கும்பகோணத்தில் உள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அதன்பேரில் நள்ளிரவு மேலக்குறிச்சிக்கு சென்ற மருத்துவக் குழுவினர்கள் அஞ்சலையம்மாளின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர். தனக்கு கண் பார்வை இல்லையென்றாலும் தன்னைப் போன்றவர்கள் கண் பார்வை பெற வேண்டும் என்பதற்காக தாயின் கண்களை தானம் வழங்கிய அசோக்குமாரின் செயலைக்கண்டு அப்பகுதி கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்வையற்ற அசோக்குமார் இது குறித்து கூறும் போது தனக்கு ஒரு வயது இருக்கும் போது மூளைக்காய்ச்சல் காரணமாக பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு முற்றிலும் பார்வை பறிபோய்விட்டது, இனியும் எனக்கு பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் விழி இல்லாத வலியை நான் அனுபவித்து வருகிறேன். எனவே அம்மாவின் கண்கள் மூலமாக பார்வையற்றவர்களுக்கு ஒளியாக்குவதற்காக தானமாக வழங்கி உள்ளேன் என்றும், நாம் இறந்த பிறகு நமது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வர வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டார். தனக்கு பார்வை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தன்னைப் போல் உள்ளர்வர்களுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக உடல் தானம் பற்றி அறியாத குக்கிராமத்தில் இருந்துக் கொண்டு தன் தாயின் கண்களை தானம் செய்துள்ள அசோக்குமார்க்கு மனநிலை பாதிப்புக்குள்ளான மனைவியும், 3 வயது மற்றும் 2 வயது என இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனா். வறுமையின் பிடியில் வாழ்ந்து வரும் இவா் தற்போது தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தினால் எந்த வித அரசு சலுகைகளும் பெற முடியாமல் தவித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனது எதிர்காலத்திற்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.