ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 18 பேர் பலி…! (பதை, பதைக்க வைக்கும் வீடியோ இணைப்பு)
ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே வெட்லபாலம் எனும் பகுதியில் சூரியஸ்ரீ ஃபயர் ராக்ஸ் என்ற பெயரில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை வயல்வெளி பகுதியில் அமைந்துள்ளது. வழக்கம்போல இன்று( பிப்.28) சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பிடித்து அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. மேலும் ஆலை முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீதும் தீப்பிடித்ததில் அவைகள் டமார்…டமார்… என பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இந்த வெடிச்சத்தம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 18 பேர் உடல் சிதறி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடி விபத்தில் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. வெடி விபத்து பற்றி தகவலறிந்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோரை அங்கே அனுப்பி வைத்துள்ளார். வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.