தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட அளவிலான கழக செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று( ஜன. 25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செயல் வீரர்கள் மத்தியில் விஜய் பேசுகையில், நம்முடைய அரசியல் பயணத்தில் மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதை நான் சொன்னவுடன் ஏதோ அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். உடனே நமக்கா? அழுத்தமா? அதற்கெல்லாம் அடங்கி போகிற ஆளா? என்று அரங்கத்தையே கலகலப்பாக்கினார்.மேலும் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டை முன்பு ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் பாஜகவுக்கு அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வேஷம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
மாற்றி மாற்றி வாக்களித்து ஏமாந்துபோன மக்கள் ஒருவித அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது நம்மை நம்புகிறார்கள். நம்மை நம்புகிறவர்களுடன் நாம் கூட நிற்க வேண்டும் என்றால் இது முக்கியமான காலகட்டம் தானே?” என்று கேள்வி எழுப்பினார். விஜய் கூட யாரும் நிற்கமாட்டார்கள் என தாழ்த்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல; கடந்த 30 வருடங்களாக தாழ்த்திதான் பேசுகிறார்கள். ஆனால் மக்கள் நம்மை தெளிவாக, தீர்க்கமாக கணித்திருக்கிறார்கள். அதை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. விஜயை மக்கள் தங்களுடைய அண்ணனான, பிள்ளையாக பார்க்கிறார்கள். அவர்களுக்காக உழைப்பதே பழக்கமாக மாறிவிட்டது. அரசியலில் இருக்கும்போது சரி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் சரி; விஜய் ஊழல் செய்யவே மாட்டான். ஒரு துளி ஊழல் கறை கூட படியாது. படியவும் விடமாட்டேன். எதற்கும் ஆசைப்படாத நான் என் கண்முன் ஏதேனும் நடந்தால் கேட்காமல் இருக்கமாட்டேன். அதனால் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தமிழ்நாட்டை ஆளவே கூடாது. அப்படிப்பட்ட கட்சிகளை எதிர்க்கும் தைரியமும் துணிவும் நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது. எனவே என்ன சூழ்ச்சி செய்தாலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிபோகவோ அடிமையாகவோ இருக்க முடியாது. என் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு செய்பவர்களிடமிருந்து அவர்களை காப்பாற்றவே வந்திருக்கிறேன். இந்த நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல; என்னுடன் பயணிக்கிற அனைவருக்கும் வரவேண்டும்” என்று பேசினார்.

Comments are closed.