Rock Fort Times
Online News

மத்திய அரசு நிதி தராவிட்டாலும் மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் அன்பில் மகேஷ்…!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், நவல்பட்டு ஊராட்சி பகுதி அண்ணா நகர் மைதானத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9,42,000 திட்ட மதிப்பீட்டில் சீரணி அரங்கம் கட்டப்பட்டது. இதனை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான முனைவர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகள் சண்முகம், கயல்விழி, சுதாகர் மற்றும் நேதாஜி இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் இருந்து வாங்கக்கூடிய வரி பகிர்வில் இருந்து 41 சதவீதம் தான் மத்திய அரசு திரும்பத் தருகிறது. மாநிலங்களிலிருந்து பெறப்படும் வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். ஆனால் மீண்டும் 41 சதவீதம் தான் என அறிவித்து உள்ளனர். எனது பள்ளி கல்வித்துறைக்கு ரூ.3548 கோடி ரூபாய் வரவேண்டும். ஆனால், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு கையெழுத்து இட்டால்தான் தருவேன் என கூறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகத்தில் தான் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம் என பாராட்டு பெற்றுள்ளோம். ஆனால், அதற்கு வழங்க வேண்டிய ரூ.3112 கோடியை இதுவரை வழங்கவில்லை. இப்படி எல்லா திட்டத்திலும் நிதி நமக்கு வருவதில்லை. பட்ஜெட்டில் ஆவது கொடுப்பவர்களாக என பார்த்தால் அதுவும் இல்லை. வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வாசிக்கும் திருக்குறளும் வாசிக்கப்படவில்லை. மத்திய அரசு நிதி தராவிட்டாலும் மக்கள் நல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்