Rock Fort Times
Online News

திருச்சி, புதுக்கோட்டை உள்பட மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை…

திருச்சி, புதுக்கோட்டை, சென்னை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. திருச்சி திருவானைக்காவலை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் உள்ள அரசு மணல் குவாரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இங்கு, குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஏரியாவை தாண்டி மணல் எடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு லாரியிலும் எவ்வளவு மணல் ஏற்றப்படுகிறது. எவ்வளவு ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொண்டனர். இதனால், இந்த குவாரியில் இருந்து இன்று மணல் லாரிகள் வெளியே செல்லவில்லை..

இதேபோல, புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலத்திலும் சரி, தற்போது தி.மு.க.ஆட்சி காலத்தில் சரி மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வருகிறார். இதுதவிர மிகப்பெரிய அளவில் சோலார் பவர் பிளான்ட் ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று ( 12.09.2023 ) காலை ராமச்சந்திரன் தொடர்புடைய அவருடைய கார்ப்பரேட் அலுவலகம், கிரானைட் குவாரி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணல் குவாரிகளில், மணல் விற்பனை செய்வதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது..

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்