நாடாளுமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதற்காக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து 28-ந்தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சிவகாசி பாவடி தோப்புதிடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அன்று இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் அரண்மனை பொதுக்கூட்டத்தில் அவர் பேசுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, இரவு 7 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஏப்ரல் 8-ந்தேதி இரவு 7 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு அன்றைய தினம் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடக்கும் பொது கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். முதல் கட்டமாக வருகிற 31-ந்தேதி வரை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்பிறகு ஏப்ரல் 1-ந்தேதி முதல் இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.