மைசூர் அரண்மனை வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உணவு உண்ணும் போது தசரா யானைகளான தனஞ்சயா மற்றும் காஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனஞ்சயா யானை, காஞ்சனைத் தாக்கி துரத்த முயன்றது. அப்போது, காஞ்சன் யானை,
பாகன் இல்லாமலேயே முகாமிலிருந்து வெளியேறி, இரும்பு தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு மைசூர் அரண்மனையின் ஜெயமார்த்தாண்ட வாயிலில் உள்ள கண்காட்சி சாலை அருகே தப்பிச் சென்றது. இதையடுத்து, மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற அங்கும்- இங்குமாக ஓடினர். பின்னர், யானைப்பாகன் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து தனஞ்சயா யானையை சமாதானப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்து முகாமுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கஞ்சன் யானையும் சாந்தமானது. இந்த யானையும் பாகன் மற்றும் வன அதிகாரிகளால் மீண்டும் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது. யானைகள் மோதலால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், பொருட்சேதமும் ஏற்படவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் தசரா யானைகள் முகாமில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. தசரா யானைகள், பொதுவாக அமைதிக்கு பெயர் பெற்றவை, அவை பயிற்சி அமர்வுகளின் போது நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியிலும், ராஜ மார்க்கா அல்லது தசரா ஊர்வல பாதையில் ஜம்பூ சவாரி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் மத்தியிலும் கூட அமைதியை இழக்காது. கம்பீரத்துடன் அமைதியாக நடந்து செல்லும். மைசூரில் தசரா நிகழ்வு யானை சவாரிதான் பலருக்கும் ஞாபகம் வரும். அங்கு ஜம்பு சவாரி ஊர்வலமானது மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. அங்கு ஊர்வலமாக செல்லும் 2 யானைகள் அமைதியுடன் சாந்தமாக செல்லும். இந்நிலையில், சாந்தத்திற்கு பெயர் பெற்ற 2 யானைகளானது திடீரென மோதலில் ஈடுபட்டு மைசூர் வளாகத்தில் ஓடிய இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.