குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!
ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க இன்று( ஜூலை 28) பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், சஞ்சீவி நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் கோபிநாத் என்பவரும் வந்திருந்தார். பிபிஏ பட்டதாரியான இவர் வெளிநாட்டு வேலை தேடி வந்தார்.
இந்தநிலையில் திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட்டை சேர்ந்த ஒரு பெண் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கோபிநாத் தரப்பினரிடம் இருந்து ரூ.3.30 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கித் தராததுடன் பணத்தையும் திருப்பி தராமல் நாட்களை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோபிநாத், பலமுறை அந்தப் பெண்ணை சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டு பார்த்தும் அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று கோபிநாத் தனது தாய், தந்தை மற்றும் அவரது உறவினர் ஒருவருடன் திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் யை கோபிநாத் தவிர மற்ற மூவரும் தங்கள் உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விபரீதத்தை உணர்ந்து அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி இதுபோல் செய்யக்கூடாது எதுவாக இருந்தாலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும், அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் அதிகாரியிடம் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு சில நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed.