திருச்சியில் டூ வீலரில் சென்று மக்கள் குறை கேட்ட துரை வைகோ எம்.பி…* பால்பண்ணை சர்வீஸ் சாலை விரைவில் அமைக்கப்படும் என உறுதி…!
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று(28-11-2025) மதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு டூ வீலரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருச்சி, மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதிக்குச் சென்ற அவர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இப்பகுதியில் உள்ள சமையல் எரிவாயு கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது இங்குள்ள “ஓ” பாலத்தில் மழைக்காலங்களில் மழைநீர் அதிகளவு தேங்குவதால் இந்த வழியாக செல்ல முடியவில்லை என பொதுமக்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து “ஓ” பாலத்திற்கு டூவீலரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, எஸ்.டி.பி.ஐ.கட்சி நிர்வாகிகள் பக்ருதீன், தளபதி அப்பாஸ், முஸ்தபா, சதாம், அப்பாஸ் சபியுல்லா உட்பட பலர் உடன் சென்றிருந்தனர்.

ஆலோசனை கூட்டம்:
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ எம்பி, திருச்சி பால்பண்ணை சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தப் பணி விரைவில் தொடங்கும். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அங்கு சர்வீஸ் சாலை அமைக்கப்படும். திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அதற்கு நல்ல தீர்வு காணப்படும்.
தெப்பக்குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட தரைக்கடைகள் அகற்றப்பட்ட விஷயம் தொடர்பாக வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான தீர்வு காண்பார். இவ்வாறு அவர் கூறினார். தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது குறித்த கேள்விக்கு, செங்கோட்டையன் ஒரு மூத்த அரசியல்வாதி. அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கத்தில் இருந்து அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் எப்படி செயல்படுகிறார் என்பது போக போக தான் தெரியும். அண்ணா, பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மரியாதை செய்தது நல்ல விஷயமாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.