மழையின் காரணமாக திருச்சி பிச்சை நகரில் மின்கம்பம் மீது மரம் சரிந்து விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்தாலும் இரவு நேரங்களில் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. அதேபோல , நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 5 மணிக்குப் பின்னர் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாலை 6.30 மணிக்கு பிறகு மின்னலுடன் மிதமான மழை பெய்ய தொடங்கி இரவு சுமார் 10 மணி வரை நீடித்தது. மழையின் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், கண்டோன்மெண்ட், கே.கே.நகர், கிராப்பட்டி, மன்னார்புரம், தில்லைநகர், உறையூர், தென்னூர், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் , மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்த போது பலத்த காற்றும் வீசியது. இதனால் திருச்சி-சென்னை பைபாஸ் சாலை, குழுமிக்கரை மெயின் ரோடு, பிச்சை நகர் பகுதியில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.
அந்த மரம் அருகில் இருந்த மின் கம்பம் மீது விழுந்ததில் மின் கம்பமும் சரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். மேலும்,அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று(07-08-2024) மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியிலும் மின் கம்பத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். மழையின் காரணமாக மரம் மற்றும் மின்கம்பம் முக்கிய சாலையில் விழுந்ததால் அந்தப் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று மாலை வரை பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed.