திருச்சி மாநகராட்சி பகுதியில் புதை வடிகால் அமைக்கும் பணியின் போது உடைந்த குழாயால் வீணாகும் குடிநீர்!
பொதுமக்கள் குற்றச்சாட்டு..
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ஏராளமான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதைவடிகால் திட்டப்பணிகள், குடிநீர் குழாய்களை மாற்றும் பணிகள், கழிவுநீர் வாய்க்கால் தூர்வாறி சீரமைக்கும் பணிகள், சாலை மேம்பாட்டுப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் மாநகர் பகுதிகள் முழுவதும் நடைபெற்று வரும் புதைவடிகால் திட்டப்பணிகள் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இதற்காக சாலைகளில் மேன்ஹோல்கள் எனப்படும் ஆழ்துளை தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்படுகின்றன. அத்துடன் குடிநீர் பிரதான குழாய்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகளும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டம் விமான நிலையம் வயர்லெஸ் சாலை (61 மற்றும் 65 ஆவது வார்டு) பகுதிகளில், கடந்த சில மாதங்களாக புதைவடிகால் மேன்ஹோல்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், ஆல்பா பள்ளி அருகே நடைபெற்ற பணிகளின்போது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தகவலறிந்த மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் வீணாவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பொதுவாகவே, மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பிரதான சாலைப் பகுதிகளில் தோண்டப்படும் குழிகளை சரிவர மூடுவதில்லை, பணிகளுக்காக கொட்டப்படும் சிமென்ட் குழாய்கள், வளையங்கள் உள்ளிட்ட பொருட்கள், இடிபாடுகள், மண் உள்ளிட்டவைகளை ஏனோதானோவென கொட்டிச்செல்வதாலும், அவ்வப்போது அப்புறப்படுத்தாத காரணத்தினாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி , வருவதாக புகார்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.