Rock Fort Times
Online News

சீரமைப்பு பணிகள் காரணமாக 6 நாட்கள் ரயில் சேவையில் அதிரடி மாற்றம் …!

சீரமைப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சீரமைப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில் – கோவை இடையேயான முன்பதிவில்லா ரயில் வருகிற 23, 24, 25, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் நாகர்கோவிலுக்குப் பதிலாக திண்டுக்கல்லில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் கோவை – நாகர்கோவில் இடையேயான முன்பதிவில்லா ரயில் 23, 24, 25, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் கோவையில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். எஸ்எம்விடி பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் 23, 24, 25, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவில் – எஸ்எம்விடி பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் அதே தேதிகளில் நாகர்கோவிலுக்குப் பதிலாக திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பெங்களுரு செல்லும். ஈரோடு- செங்கோட்டை இடையேயான முன்பதிவில்லா ரயில் மறுமார்க்கத்தில், செங்கோட்டை – ஈரோடு இடையேயான முன்பதிவில்லா ரயில் அதே தேதிகளில் செங்கோட்டைக்குப் பதிலாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும். தாதர் – திருநெல்வேலி இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் இன்று(வியாழக்கிழமை) பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது. அதாவது, தாதரில் இருந்து புறப்படும் ரயில், மதுரை வரை மட்டுமே இயக்கப்படும். திருநெலவேலி – தாதர் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், வருகிற 28ம் தேதி திருநெல்வேலிக்கு பதிலாக மதுரையில் இருந்து மட்டுமே புறப்படும். ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி-திருநெல்வேலி வாராந்திர ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும். தாதர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில், வருகிற 24ம் தேதி தாதரில் இருந்து புறப்பட்டு
விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் ரயில், வருகிற 26ம் தேதி திருநெல்வேலி சந்திப்புக்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும். திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் இடையேயான சிறப்பு ரயில், வருகிற 25ம் தேதியும், மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் திருநெல்வேலி இடையேயான சிறப்பு ரயில் வருகிற 26ம் தேதியும் முழுமையாக ரத்து செய்யப்படும். சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் வாராந்திர ரயில் வருகிற 23ம் தேதி நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இயக்கப்படாது. மாறாக, சேலம், ஈரோடு, திரிசூர், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலை அடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்