பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை கோட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை கோட்டத்தில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெற இருப்பதால் ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு மதியம் 2 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்16845) நேற்று (31-ந் தேதி) முதல் இம்மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை நீங்கலாக திண்டுக்கல் – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், செங்கோட்டையில் இருந்து ஈரோட்டிற்கு காலை 5.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16846) இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை செங்கோட்டை – திண்டுக்கல் இடையே புதன்கிழமை நீங்கலாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. அதன்படி, செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரெயில் (16848) இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை காலை 6.55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும். இந்த ரெயில் காரைக்குடி, திருச்சி, கல்லக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கூடுதலாக, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய இடங்களிலும் நிற்கும். இதேபோல், நாகர்கோவில் – மும்பை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) செப்டம்பர் 4, 7,11,14,18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மதுரை, திண்டுக்கல் செல்லாமல், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12666) செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். அப்போது, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், குருவாயூர் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை (திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை தவிர) விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக இயக்கப்படும். இடையில், கொடை ரோடு, மணப்பாறை, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கன்னியாகுமரி – ஐதராபாத் இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07229) வருகிற 5, 12,19, 26 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இடையில், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.