Rock Fort Times
Online News

டபுள் ஆக்‌ஷனா? பெரம்பூரில் போட்டியிடும் விஜய்க்கு வயது 52, திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய்க்கு வயது 51…!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதியில் போட்டியிடும் அவர், அந்த இரு தொகுதிகளுக்குமான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், அவர் தாக்கல் செய்த இரு வேட்பு மனுக்களிலும் குளறுபடிகள் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இதனால், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. விஜய் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, சட்டப்படி தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை படிவம் 26ல் குறிப்பிட வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதிக்காக அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மதுரை மாவட்டம் கூடக்கோவில் காவல் நிலையத்தில் 2025 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதே நேரத்தில் பெரம்பூர் தொகுதிக்காக அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீது எந்த ஒரு குற்றவியல் வழக்கும் நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் இருப்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் தனது பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரியது மட்டுமின்றி, வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஒரு வழக்கை ஒரு இடத்தில் ஒப்புக்கொண்டு மற்றொரு இடத்தில் மறைப்பது தகவல் மறைப்பு என்ற பிரிவின் கீழ் வரும். வேட்புமனு பரிசீலனையின் போது, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி மனுவை நிராகரிக்கக் கோரினால் தேர்தல் அதிகாரி தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கும். இதேபோல பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில் வயது 52 என்றும், திருச்சி கிழக்கு தொகுதியில் வயது 51 என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுவும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், விஜய்க்கு இருக்கும் வாய்ப்பு என்னவென்றால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் இருப்பதால், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதன் மூலம் இந்தச் சிக்கலில் இருந்து அவர் தப்பிக்க முடியும்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்