திருச்சி மாநகராட்சியோடு இணைக்காதீங்க… லால்குடி அருகே 300க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் ! ( வீடியோ இணைப்பு )
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நெடுஞ்சலக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி – சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாநகராட்சியுடன் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை இணைத்துள்ள நிலையில், லால்குடி அருகே அப்பாதுரை தாளக்குடி, வாளாடி ,நெருஞ்சலக்குடி ஆகிய ஊராட்சிகளையும் திருச்சியில் மாநகராட்சி உடன் இணைத்துள்ளனர். இதனை அறிந்த நெடுஞ்சலக்குடி ஊராட்சி மக்கள் மாநகராட்சியுடன் நெடுஞ்சலக்குடி ஊராட்சியை இணைத்தால் தொகுப்பு வீடுகள் மற்றும் அரசு மானியங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் 100 நாள் வேலை திட்டம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் எனவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி – சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வார்டு இணைப்பு என்பது தற்காலிக உத்தேசம் தான். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு பரிசீலனை செய்து மாற்று நடவடிக்கை எடுக்கும். எனவே உங்களது கோரிக்கையை மனுவாக கொடுங்கள். அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் என கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
Comments are closed.