திருச்சி, பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருக்கிறதா?- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்…!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதனை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அதற்கான திட்டத்தை சென்னையில் இன்று(26-08-2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். அந்தவகையில், திருச்சி மேலப்புதூரில் உள்ள ஃபிலோமினாஸ் பள்ளியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பிரச்சார கூட்டத்திற்கு வந்த நபர் மயங்கி விழுந்து விட்டதாக அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார்கள். அவர்களே வரவழைத்து விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அவர்களே தாக்கியுள்ளார்கள்.ஆம்புலன்ஸை தாக்குவது மிகப்பெரிய தவறு. முதல்வர் உரையாற்றி கொண்டிருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் வந்தால் உரையை நிறுத்திவிட்டு அவர் ஆம்புலன்ஸை அனுப்பி வைப்பார் . ஆனால், அதிமுகவினர் பிரச்சினை செய்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அதிமுகவினர் கூட்டம் நடத்துவதற்கு எந்தவித இடைஞ்சலும் நாங்கள் செய்வது கிடையாது. என்னுடைய சொத்து மதிப்பை உயர்த்துவதற்காக தான் பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். எனக்கு அப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியுள்ளார். அப்படி 300 ஏக்கர் நிலம் அப்பகுதியில் இருந்தால் அதை அரசு எடுத்துக் கொள்ளலாம். பழனிச்சாமி கூட அதை எடுத்து கொள்ளலாம். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அவரைப் போலவே எங்களையும் அவர் நினைத்து விட்டார். மழை பெய்து முடிந்து பத்து நாட்கள் வரை தண்ணீர் தேங்கி இருந்த காலம் உண்டு. தற்போது இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து விடுகிறது. பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வர் குடும்பத்தோடு நான் இணக்கமாக இருப்பதாக எடப்பாடி பேசி உள்ளார். அவர்களோடு எப்போது சண்டை போட்டேன்.அவர்தான் எங்கள் கட்சிக்கு தலைவர். நாங்கள் அவரோடு இணக்கமாகத்தான் செல்வோம். எடப்பாடி பழனிச்சாமி தன்னோடு இணக்கமில்லாதவர்களை அருகில் வைத்துக் கொள்வதில்லை. தங்கமணியை ஒதுக்கி வைத்து விட்டார். முதல்வரோடு இணக்கமாக இருக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி எனக்கு சர்டிபிகேட் கொடுத்தது மகிழ்ச்சி தான். வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் தோல்வியை தழுவுவார். திமுக தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார் .
Comments are closed.