Rock Fort Times
Online News

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளை கண்டாலே திமுக அஞ்சி நடுங்குகிறது- விஜய்…!

தமிழகத்தில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் களம் காண்கிறது. இதுவரை இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள த.வெ.க அடுத்து திருச்சியில் இம்மாதம் செப்டம்பர் 13-ம் தேதி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து அனுமதி கேட்டும், பாதுகாப்பு கேட்டும் த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் திருச்சி ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். முன்னதாக திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதாக காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் திமுக அரசு இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும், ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும், மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. தேர்தல் பிரசார பயணம் என்பது, அனைத்துக்கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப் பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும்.இந்த வெற்று விளம்பர மாடல் அரசு தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் விஜய் கூறி உள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்