மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், கல்விக்காக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால் கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது மத்திய கல்வி அமைச்சர், தமிழக மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது, மாணவர்களின் எதிர் காலத்தை மாநில அரசு பாழாக்குகிறது என்று பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது கல்வி அமைச்சர், திமுக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறினார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நாடாளுமன்றம் இன்று(11-03-2025) கூடியபோது, புதிய கல்விக்கொள்கை விவகாரம், மும்மொழிக்கொள்கை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது. அவை தொடங்கியதில் இருந்தே மக்களவையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கம் எழுப்பினர். மேலும் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தினர். அதைபோல தொகுதி சீரமைப்பு, கல்வி நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த நோட்டீஸ் மீது விவாதம் நடத்த அனுமதி மறுத்ததால் மாநிலங்களவையிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
Comments are closed.