தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். இத்தேர்தலில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், கனிமொழி வேட்பு மனுவில் கணவர் அரவிந்தனின் பான்கார்டு எண் குறிப்பிடவில்லை, ஆகையால் கனிமொழி வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி இருந்தார். இம்மனுவை தள்ளுபடி செய்யக் கோரி கனிமொழி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கனிமொழியின் இம்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்தார். கனிமொழி மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், விசாரித்து தீர்ப்பை கடந்த வாரம் ஒத்திவைத்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், கனிமொழி வெற்றிக்கு எதிரான மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.