திமுக முன்னாள் மத்திய மந்திரியும், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில், இன்று(5-10-2023) அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர தி.நகரில் உள்ள அவரது அலுவலகம், ஈக்காட்டுதாங்கல், குரோம்பேட்டையில் உள்ள அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி, ரேளா மருத்துவமனை, தாகூர் கலைக்கல்லூரி, பூந்தமல்லியில் அமைந்துள்ள சவீதா கல்விக்குழுமம் என ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல புதுச்சேரி அடுத்த பத்துக்கன்னு பகுதியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி உட்பட தமிழ்நாடு, புதுச்சேரியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனைகளின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தற்போது ஜெகத்ரட்சகன் வீடுகளிலும், அவரது உறவினர் வீடுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருவது அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.