Rock Fort Times
Online News

திமுக தீயசக்தி- த.வெ.க.தூயசக்தி இந்த 2 சக்திகளுக்கும் இடையே தான் போட்டியே… ஈரோடு பொதுக் கூட்டத்தில் விஜய் பரபரப்பு பேச்சு!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக விஜய், தமிழகம் முழுவதும் பரப்பரை மேற்கொண்டு வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதத்திற்கு மேலாக மௌனம் காத்த அவர், அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் பேசிய அவர் இன்று(18-12-2025) ஈரோடு, பெருந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதற்காக கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:- ஈரோடு என்றாலே மஞ்சள் விளையும் பூமியும், அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் தான் ஞாபகத்துக்கு வருவார்கள். பொதுவாக நல்ல காரியங்களை தொடங்குவதற்கு முன்பாக மஞ்சள் தான் பிரதானமாக இருக்கும். நம்ம வீட்டுப் பெண்கள் நமக்காக மஞ்சள் உடை உடுத்தி இறைவனிடம் வேண்டிக் கொள்வார்கள். அதேபோல நமது கொடியிலும் மங்களகரமான மஞ்சள் இடம் பெற்று இருக்கிறது. இங்கே மகத்தான ஒரு மாமனிதரைப் பற்றி சொல்லியாக வேண்டும்.அவர்தான் காளிங்கராயர். மிகவும் கஷ்டப்பட்டு காளிங்கராயன் அணை, காளிங்கராயர் கால்வாயை கட்டி முடித்தார். ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறீர்கள். காளிங்கராயரை பாராட்டாமல் உங்களையா பாராட்ட முடியும். என்னைப் பற்றி அவதூறு, சூழ்ச்சி வலை பின்னப்பட்டு வருகிறது. பொதுமக்களாகிய நீங்கள் இருக்கும் வரை என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது. உங்களுக்கும், எனக்குமான உறவு 30 ஆண்டுகளுக்கும் மேலானது. நீங்கள் என்னை கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்காக வாழ்நாள் முழுவதும் நான் நன்றியோடு இருப்பேன். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தி இருந்தால் மேலும் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று இருப்பார்கள். வள்ளுவர் கோட்டத்தின் மீது காட்டும் அக்கறையை விவசாயிகள் மீது காட்டுங்கள். ஈரோட்டில் பிறந்த மற்றொரு மாமனிதர் தந்தை பெரியார். இடஒதுக்கீடு, வகுப்புவாதம், பெண் வன்கொடுமை போன்றவற்றை தீவிரமாக எதிர்த்து போராடியவர். அதனால் தான் அவரை கொள்கை தலைவர் என்று ஏற்றுக் கொண்டுள்ளோம். அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்கள் எங்களுக்கு தான் சொந்தம் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
அவர்களிடமிருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்துக் கொண்டோம். பெரியார் பெயரைச் சொல்லி தற்போது கொள்ளையடிக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு கொள்ளையடித்த பணம் தான் துணை என்றால் எனக்கு மக்களின் மாஸ் தான் துணை. நீட்டை ரத்து செய்வோம், நீர்நிலைகளை தூர்வார கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவோம், லட்சக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் இப்படி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்களே செய்தார்களா?. எங்களுக்கு திமுகவும், பாரதிய ஜனதாவும் தான் எதிரிகளே. களத்தில் இல்லாதவர்களை எல்லாம் தமிழக வெற்றிக்கழகம் எதிர்க்காது. தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை நடக்கிறது. ஈரோட்டில் செம்மண் கூட காணாமல் போகும். மக்கள் காசில் கொடுப்பது எப்படி இலவசம் ஆகும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக ஒரு தீய சக்தி… த.வெ.க.தூய சக்தி… வருகிற சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு சக்திகளுக்கும் இடையே தான் போட்டியே. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கட்சி நிர்வாகிகள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோரும் பேசினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்