திருச்சியில் மார்ச் 9ம் தேதி திமுக மாநாடு: தடைபோட முடியாத கடல் அலையாய் அணி திரள்வோம்… அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன. ஆட்சியை தக்கவைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக திமுக முகவர்கள் பயிற்சி மாநாடு, இளைஞர் மாநாடு, மகளிர் மாநாடு உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. அதேபோல திருச்சியில் வருகிற மார்ச் 9ம் தேதி சிறுகனூரில் பிரம்மாண்ட மாநாடு நடத்த முடிவு செய்துள்ளது. மாநாடு தொடர்பாக தி.மு.க.முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கழகத்தலைவர் அறிவித்தபடி மார்ச் 9-ல் திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து மிக பிரமாண்டமாக நடத்திட தயாராகி கொண்டிருக்கிறோம்.
திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட திக்கெட்டும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். திருச்சியில் திரளும் கூட்டம் 2026 சட்டசபை தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாய் அமைந்திட வேண்டும். தமிழ்நாடு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு. என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவாடி, வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரைகள், கழக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள், உறுப்பினர்கள் பயிற்சி கூட்டம், வெல்லும் தமிழ் பெண்கள் மகளிரணி மாநாடுகள், வீடு வீடாக பரப்புரை என அசுர வேகத்தில் நம் கழகம் களப்பணியாற்றி வந்தாலும் கழகத்தலைவர் கூறியதுபோல, திருச்சி மாநில மாநாடுதான் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான ‘மெயின் பிக்சர்’ ஆக அமைய உள்ளது. இந்த மாபெரும் மாநில மாநாட்டில் தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் என கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன். 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இம்மாபெரும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடும் வகையில் அனைத்து கழக மாவட்ட செயலாளர்களும் அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அளவில் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி திருச்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, வாகன வசதிகள், செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும்.
வாகன நிறுத்தும் வசதி, போக்குவரத்து வழித்தட ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து கிளம்பும் வாகன விவரங்களை மார்ச் 1-ந்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தங்களது மாவட்டத்தின் கடைசி வாகனம் மாநாடு நோக்கி கிளம்பிய பிறகுதான் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு கிளம்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கரை புரண்டு ஓடும் காவிரியாய் தடை போட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம். கழக தலைவரை மீண்டும் முதல்-அமைச்சராக்க சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம். ஸ்டாலின் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும் என தெரிவித்து உள்ளார்.

Comments are closed.