தேமுதிக எங்கள் குழந்தை, ஒரு தாயாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்…* கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றன. இதற்காக திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக- பாஜக தலைமையில் மற்றொரு அணியும், தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு கட்சிகளும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றன. நாம் தமிழர் கட்சியை தவிர மற்ற கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேமுதிகவை தங்களது கட்சிக்குள் கொண்டுவர திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால், கூட்டணியில் இணைய பிரேமலதா விஜயகாந்த் சில ‘டிமாண்ட்’ வைப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்த பிரேமலதாவை செய்தியாளர்கள் சந்தித்து கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. பிப்ரவரி 20க்குப் பிறகு தான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம்” என்று கூறினார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்த கட்சிகள் தான் இடம்பெற்றுள்ளது என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். எதுவுமே முடிவாகவில்லை. அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்த கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவை பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம்” என்று கூறினார்.

Comments are closed.