தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத் துறை அமல்படுத்தி உள்ளது. பட்டாசு கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறை இயக்குநரும், டி.ஜி.பி.யுமான சீமா அகர்வால் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பினார். அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடிப்பொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. தற்காலிக பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2,499 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால் பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தீயணைப்பு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

Comments are closed.