தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதையிலிருந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணிகளும் மாறி வருகின்றன. அந்த வகையில் எதிரும்- புதிருமாக இருந்த அதிமுகவும், பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்துள்ளன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் விடுவிக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது மூத்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பலருக்கு பிடிக்கவில்லை. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.முகமதுகனி, அதிமுவின் சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் பதவியில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சி. விஜயபாஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நான் கடந்த 45 ஆண்டு காலமாக அதிமுகவில் பல பொறுப்புகளிலிருந்து பணியாற்றியுள்ளேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பாசிச பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். இப்படிக்கு புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசி” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகி விலகி உள்ளது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.