பேரிடர் கால அவசர தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ எனும் புதிய திட்டத்தின் சோதனை ஓட்டத்தை இன்று ( 20.10.2023 ) தமிழ்நாடு அரசு தொடங்குகிறது. பேரிடர் காலங்களில் அவசரகால தகவல் தொடர்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில், இன்று செல்போன் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மத்திய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர் காலங்களில் அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்த, இந்த செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டத்தை மேற்கொள்கின்றன.
செல் ஒலிபரப்பு எச்சரிக்கை முறை மூலம், ஒரு செல்போன் கோபுரத்தின் எல்லைக்குட்பட்ட அனைத்து செல்பேசிகளுக்கும், ஒரே நேரத்தில் பேரிடர் எச்சரிக்கைகளை அனுப்பலாம். சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்கள் மற்றும் எதிர்பாரா இதர செயற்கை பேரிடர்கள் காலத்தில், அவசரகால எச்சரிக்கைகளை வழங்குவதில் இவை பேருதவியாக இருக்கும். இவ்வாறு பொதுமக்களின் செல்போன்களில் பெறப்படும் அவசர எச்சரிக்கை என்பது முழுக்கவும் பரிசோதனை அடிப்படையிலானது. உண்மையான அவசர நிலையைக் குறிப்பதல்ல. எனவே இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், எதிர்வினை ஆற்றத் தேவையில்லை எனவும் பொதுமக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.