மாற்றுத்திறனாளி மாணவி தற்கொலை:- திருச்சி அரசு மருத்துவமனை முன்பு பார்வையற்றோர் சங்கத்தினர் போராட்டம்…!
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அரசு விழியிழந்தோர் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயில பள்ளி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ராஜேஸ்வரி(18) என்கிற மாணவியும் பயின்று வந்தார். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்தார். இந்தநிலையில் நேற்று(09-03-2025) அந்த மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த விடுதி கண்காணிப்பாளர் இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு பள்ளி தரப்பிலும் அந்த மாணவியின் பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது தெரிய வந்தது. இந்தநிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த பார்வையற்றோர்
சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் இன்று அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாணவி தற்கொலை சம்பவத்தில் உள்ள உண்மை நிலையை காவல்துறையினர் கண்டறிய வேண்டும் என அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையம் மற்றும் மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Comments are closed.