கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மில்ஸில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவதற்கு முன் புலம்பெயர் தொழிலாளர்கள் சைலேந்திரபாபுவுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ,சேலம் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தொழிலாளர்களுடன் ஹிந்தியில் பேசி தொழிலாளர்களின் பாதுகாப்புகளை தெரிவித்தார். மேலும் கோவை மாநகர காவல் துறை என்றும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார். மேலும் டிஜிபி தலைமையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தை தொழிலாளர்கள் வீடியோ எடுத்து தங்கள் குடும்பங்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அனுப்ப காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.