Rock Fort Times
Online News

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்: விநாயகருக்கு 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்…!

விநாயகர் சதுர்த்தி விழா இன்று(07-09-2024) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இன்று காலை மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ மற்றும் உச்சி விநாயகர் சன்னதியில் 75 கிலோ என 150 கிலோ எடையில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை தாயுமானவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க விநாயகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு செய்யப்பட்டது. முன்னதாக, இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய மூலப் பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது. இன்று தொடங்கி 14 தினங்கள் நடைபெறும் இந்த விழாவில் உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தன‌காப்பு அலங்காரம் நடைபெறும். மேலும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாணிக்க விநாயகர், உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு விநாயகர் காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் ஜெய நிலா, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்கு திருச்சி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்