விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை கோவிலில் குவிந்த பக்தர்கள்…150கிலோ ராட்சத கொழுக்கட்டை படையல்!
விநாயகரை வழிபட்டு எந்த ஒருகாரியத்தை தொடங்கினாலும் அந்த காரியம் நல்லபடியாக அமையும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும். இதனால் விநாயகரை முழுமுதற்கடவுளாக இந்துமக்கள் வழிபட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு இன்று( ஆகஸ்ட் 27) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸாரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றன. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்சியில் உள்ள பிரசித்திபெற்ற மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு 50 கிலோ பச்சரிசி, 50 கிலோ உருண்டை வெல்லம், 2கிலோ எள், 1கிலோ ஏலக்காய் மற்றும் சாதிக்காய், 6 கிலோ நெய், 100 தேங்காய் ஆகியவற்றை கொண்டு தலா 75 கிலோ எடையில் 150கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்களால் தொட்டிலில் வைத்து கொண்டு வரப்பட்டு விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டையானது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலைக்கோட்டை கோவிலுக்கு திருச்சி மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து விநாயகரை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
Comments are closed.