ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்து தரக்குறைவாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி எஸ்பி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் குறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரக்குறைவாக பேசிய ஆடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த ஆடியோவை கசிய விட்டது திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் தான் என அக்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில் தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது, அந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது அவர், ஐபிஎஸ் அதிகாரிகளை தரக்குறைவாகவும், அநாகரீகமாகவும் பேசினார். அவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்தநிலையில் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் இது போன்ற பேச்சுக்களை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தனது “X” தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து பாட்டு பாடி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரான சாட்டை துரைமுருகன் இனிமேல் அவ்வாறு பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். தற்போது ஐபிஎஸ் அதிகாரிகளை தரக்குறைவாக சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.