கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது பாரபட்சம்: அமைச்சர் கே.என்.நேரு காட்டம்…!
கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது பாரபட்சம் என்று அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி, கலையரங்கத்தில் இன்று(19-11-2025) 72- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். அப்போது அமைச்சர் பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் இல்லாத நிறுவனங்களே இல்லை என்கிற நிலை கலைஞர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு 7 சதவீதம் வட்டி இருந்தது. அது படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று சரியாக கடன் செலுத்தும் விவசாயிகளின் வட்டியை அரசே ஏற்கும் நிலை உள்ளது. கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு ரூ.7500 கோடியை கலைஞர் தள்ளுபடி செய்தார். அதை பார்த்து அன்று நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் இந்தியா முழுவதும் ரூ.80 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். இவ்வாறு அவர் பேசினார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவு சங்கங்கள் மக்களின் பணத்திற்கு முழு பாதுகாப்பு வழங்குகிறது. தமிழ்நாட்டில் 40,000 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என காரணம் கூறுகிறார்கள். ஆனால், வெளி மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி தராமல் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்.திருச்சி மாவட்டத்தில் ரெயில்வே பால பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தாமதமாக ரெயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இதுதவிர காவேரி பாலப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் உயர்மட்ட பாலப்பணிகளை தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்த பணிகள் முடிந்த பின் உயர்மட்ட பால பணிகள் தொடங்கப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கான உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிந்த பின் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை முதல்வர் அறிவிப்பார் என்று கூறினார்.


Comments are closed.